தமிழகம்

குரூப்-4  தேர்வு  முடிவுகளில்  முறைகேடு  புகார் விடைத்தாள், ஆவணங்கள் ஆய்வில் தவறு கண்டறியப்பட்டால் நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி செயலர் உறுதி

செய்திப்பிரிவு

குரூப்-4 தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் தொடர்பாக விடைத்தாள்கள், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தவறு கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் க.நந்தகுமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சமீபத்தில் குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து தேர்வாணைய செயலர் க.நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுவோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் இருக்கும்படி தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த குரூப்-4-க்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32,879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் இருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமேசுவரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வுக்கூடங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். குறிப்பாக ராமேசுவரம் புனித ஜோசப் மேனிலைப்பள்ளி, ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வடக்கு, தெற்கு கட்டிடங்கள், உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் தேர்வு நடைபெற்றது. அதேபோல், கீழக்கரை வட்டத்தில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கசனல் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. இந்த 9 மையங்களில் மொத்தம் 2,840 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர்.

இதில் இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 262 பேர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 57 பேர். இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 40 பேர். இந்த 40 பேரும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் ராமேசுவரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, செய்திகளில் குறிப்பிடுவதைப்போல் இந்த 57 பேரும் ஒரே அறையில் இருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்தில் இருந்தோ தேர்வு செய்யப்படவில்லை. மேலும் இம்மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் ஒட்டு மொத்த தரவரிசை அடிப்படையில் முதல் ஆயிரம் இடங்களில் 40 பேரும், முதல் 100 இடங்களில் 35 பேரும் உள்ளனர்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக அந்த விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் ஆவணங்கள் மட்டுமின்றி, இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து எவ்வித பாரபட்சமும் இன்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு, விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும்.

விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்கு காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும். எனவே தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்கும்படி தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT