உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் நேற்று ஆற்றிய உரையில் இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் முன் அனுமதியின்றி கர்நாடகத்தில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாமல் நிறுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
பெண்ணையாற்றுப் படுகை
யில் உள்ள மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், பெண்ணையாறு விவகாரம் குறித்து தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விரைவில் பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.
தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாறு வடிநிலப் பகுதிகளில் அணைகள், நீரோட்டப் பாதையை மாற்றியமைக்கும் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு நடத்தியது பாராட்டுக்குரியது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் அளவிலான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ரூ. 7 கோடியே 85 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசும் கேரள அரசும் விரைவில் வழங்க வேண்டும்.
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கிய ஆந்திர முதல்வருக்கு நன்றி. குடிமராமத்து திட்டத்தின்கீழ் 2016-17-ம் ஆண்டில் ரூ. 931 கோடியே 76 லட்சத்தில் 4,871 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்துக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டத்தின்படி காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். அதன் முதல்கட்டமாக முதல்வர் ஏற்கெனவே அறிவித்தபடி காவிரி தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.
ரூ.7,200 கோடி காப்பீடு
இந்த ஆண்டு பருவமழை சாதகமாக இருந்ததால் பயிரிடும் பரப்பு 7 லட்சம் ஏக்கர் வரை அதிகரித்துள்ளது. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக விவசாயிகள் காப்பீடு இழப்பீடாக ரூ.7,200 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். தமிழகத்தின் சர்க்கரை தொழிற்சாலைகளின் மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் சிறப்பு நிதிச் சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடியில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். மூக்கையூரில் ரூ.120 கோடி, குந்துக்கல்லில் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான மீன்பிடித் துறைமுகங்கள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளதில் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி, முதுநகரில் ரூ. 420 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசு நபார்டு வங்கியிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.