புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் தன்வந்தரி நகர் காவல்நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சர்தார் வல்லபபாய் படேலின் படம். 
தமிழகம்

புதுச்சேரி காவல் நிலையங்களில் சர்தார் வல்லபபாய் படேல் படம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

செய்திப்பிரிவு

மத்திய உள்துறை உத்தரவின்படி புதுச்சேரியிலுள்ள காவல் நிலையங்களில் சர்தார் வல்லபபாய் படேல் படம் வைக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல்துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சர்தார் வல்லபபாய் படேல். மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைந்த பிறகு, படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி நிறுவினார். தொடர்ந்து படேலுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலுள்ள காவல் நிலையங்களில் படேல் உருவ படம் புதிதாக வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி காவல்துறை தலைமைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் சர்தார் வல்லபபாய் படேலின் உருவப் படத்தை வைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலுள்ள காவல் நிலையங்களில் படேல் உருவப்படம் வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசு அலுவலகங்களிலும் விரைவில் இதேபோல் படம் வைக்கவும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT