தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற 91 ஆயிரத்து 907 உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று பதவியேற்றனர். தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடந்தன.
இந்நிலையில், வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. அதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 91 ஆயிரத்து 907 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரி விக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கு நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் 3 ஆண்டுகளுக்குத் போட்டியிட தடை விதிக்கப்படும்.