அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக்கும் நிலையில் 2 ஆக பிரித்து நிர்வகிப்பது தொடர்பான அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மாநில சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மாநில பொதுப்பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதால், ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதியை அடைந்த பின்னரும் கூட, தொடர்ந்து மாநில சட்டத்தின் கீழ் இயங்கும் என்றும், மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து அதற்கு பொருந்தும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து ஒன்றை உயர்கல்வி நிறுவனமாகவும், மற்றொன்றை பல்கலைக்கழகமாகவும் நிர்வகிப்பது குறித்தும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது இரு அமைப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், உயர்கல்வித் துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா, நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கூட்ட முடிவில், அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தின் கொள்கைகள் சார்ந்த விஷயங்கள் மற்றும் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீடு ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் இன்றைய கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் பெயர் எந்த காலத்திலும் மாற்றப்படாது.
அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான கல்வியாளர்கள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும். அவர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அத்துடன், 69 சதவீத இட ஒதுக்கீட்டிலும் மாற்றம் இருக்காது. தொடர்ந்து அது பின்பற்றப்படும். தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.