‘சிங்கப்பூர் 2020’ சுற்றுலா திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் பயணத் துறை வாரியத்தின் இந்திய மற்றும் மத்திய கிழக்கு, தெற்காசிய பகுதிகளுக்கான மண்டல இயக்குநர் ஜி.பி.தர், தலைமை நிதி அதிகாரி சின் சாக்ஹின், இந்திய, தெற்காசிய பகுதி இயக்குநர் லிம் சி பிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க ‘சிங்கப்பூர் 2020’விழிப்புணர்வு திட்டம்: சென்னையில் நேற்று தொடங்கியது

செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ‘சிங்கப்பூர் 2020’ என்ற சுற்றுலா விழிப்புணர்வு திட்டம் சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் ‘சிங்கப்பூர் 2020’ என்ற விழிப்புணர்வு திட்டம் (Road Show) சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள 50 பேர் அங்குள்ள சுற்றுலா திட்டங்கள், கடற்கரைகள், தீவு, சொகுசு விடுதிகள், கலை நிகழ்ச்சி, விமான சேவைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் பயணத் துறை வாரியத்தின் இந்திய மற்றும் மத்திய கிழக்கு, தெற்காசிய பகுதிகளுக்கான மண்டல இயக்குநர் ஜி.பி.ஸ்ரீதர், இந்திய, தெற்காசிய பகுதி இயக்குநர் லிம் சி டிங் ஆகியோர் கூறியதாவது:

சிங்கப்பூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்தவரை, சீனா, இந்தோனேசியாவுக்கு அடுத்த படியாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிங்கப்பூர் வருகின்றனர். 2018-ல் மட்டும் இந்தியாவில் இருந்து 14.40 லட்சம் பேர் வந்துள்ளனர். மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூருக்கு சுற்றுலா வருகின்றனர்.

சிங்கப்பூர் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ‘சிங்கப்பூர் 2020’ என்ற நிகழ்ச்சியை சென்னையில் தொடங்கியுள்ளோம். இதேபோல, மற்ற நகரங்களிலும் பல நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் சுற்றுலா துறை நடத்த உள்ளது. தென்னிந்தியாவின் 9 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை உள்ளது. பயண வசதி மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. சிங்கப்பூரில் செண்டோசா தீவு, கடற்கரைகள் உள்ளிட்ட இடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிரத்யேக கண்காட்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. எனவே, சிங்கப்பூருக்கு வரும்சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT