தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள்: மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற இடங்களை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் ஆணையம் கட்சிகள் வாரியாக முடிவுகளை அறிவிக்காததால், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாங்கள் பெற்ற இடங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டனர். அமமுக 94 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இதேபோல், மதிமுக 2 மாவட்ட கவுன்சிலர், 24 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும், தமாக 3 மாவட்ட கவுன்சிலர், 23 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும், விசிக 1 மாவட்ட கவுன்சிலர், 31 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும் அறிக்கைகள் மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணி: இத்தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 243, காங்கிரஸ் 15, இந்திய கம்யூனிஸ்ட் 7, மார்க்சிஸ்ட் 2, மதிமுக 2, விசிக 1 என 270 இடங்களையும், ஒன்றியகவுன்சிலர் பதவிகளில் திமுக 2099, காங்கிரஸ் 132, இந்திய கம்யூனிஸ்ட் 62, மார்க்சிஸ்ட் 33, மதிமுக 18, விசிக 16, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, இந்திய ஜனநாயகக் கட்சி 1 என மொத்தம் 2 ஆயிரத்து 362 இடங்களையும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியுள்ளன.

அதிமுக கூட்டணி: மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 214, பாமக 16, பாஜக 7, தேமுதிக 3, தமாகா 2 என 242 இடங்களையும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 1,781, பாமக 271, தேமுதிக 99, பாஜக 85, தமாகா 12, புதிய நீதிக் கட்சி 1 என மொத்தம் 2,195 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதிமுக கூட்டணியைவிட திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 28 இடங்களையும், ஒன்றியகவுன்சிலர் பதவிகளில் 167 இடங்களையும் அதிகம் பெற்றுள்ளது.

சதவீதத்தில்...

கட்சி ரீதியாகப் பார்த்தால் திமுக, அதிமுகவுக்கு அடுத்த மாவட்ட கவுன்சிலர் 16, ஒன்றிய கவுன்சிலர் 217 என 3-வது இடத்தை பாமக பிடித்துள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 47.18, அதிமுக 41.55, காங்கிரஸ் 2.91, பாஜக 1.36, இந்திய கம்யூனிஸ்ட் 1.36, தேமுதிக 0.58, மார்க்சிஸ்ட் 0.39, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 41.24, அதிமுக 34.99, காங்கிரஸ் 2.59, தேமுதிக 1.94, இந்திய கம்யூனிஸ்ட் 1.22, மார்க்சிஸ்ட் 0.65 சதவீத இடங்களைப் பிடித்துள்ளன.

தனித்துப் போட்டியிட்ட அமமுக 66, நாம் தமிழர் கட்சி 1, எஸ்டிபிஐ 3, புதிய தமிழகம் 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களைப் பிடித்துள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியைப் பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT