கே.பாலு: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக; தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: வழக்கறிஞர் பாலு

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அடிப்படையில் தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக என, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக, பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு இன்று (ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் ஓர் அங்கமாக போட்டியிட்ட பாமக, 36 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களிலும், 432 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு 217 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக பெற்றது.

எனினும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளில் பாமக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்ற விவரம் இடம்பெறவில்லை. மாறாக, மற்றவை என்ற பெயரில் சிறிய கட்சிகளுடன் பாமக வெற்றி பெற்ற இடங்களும் சேர்த்துக் கணக்கிடப்பட்டன.

பாமக அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் பாமக எந்தெந்த பகுதிகளுக்கு எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்ற விவரம் வெளியிடப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டது.

ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று அதுகுறித்து வழக்குத் தொடர சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் அனுமதி கோரப்பட்டது. நீதிபதியும் வழக்குத் தொடர அனுமதி அளித்தார்.

ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் முடிவுகள் பக்கத்தில் பாமக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 16 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 217 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக என்பதை இதன் மூலம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது" என கே.பாலு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT