அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.லாசர், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் இந்திரஜித் இருவரும் சனிக்கிழமை திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தொடர்ச்சியாக வறட்சி நீடிக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைந்ததனால் தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் ஒரு போக சாகுபடி தவிர்த்து, தமிழ் நாடு முழுவதும் விவசாயம் பொய்த்துவிட்டது.
இது குறித்து நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இடதுசாரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சிப்பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத் தியதற்கு தமிழக முதல்வர் எந்த பதிலும் கூறவில்லை.
தமிழக முதல்வர் மேலும் தாமதிக்காமல் கடந்த ஆண்டு சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் வறட்சியால் பாதித்தவை என்று அறிவித்ததுபோல இந்த ஆண்டும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகள் என்று அறிவிக்க வேண்டும்.
குடிநீர் தட்டுபாடுள்ள அனைத்து இடங்களுக்கும் வாகனம் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும். நூறுநாள் வேலையை 150 நாள் வேலையாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
நூறு நாள் வேலையில் அரசின் சட்டப்பூர்வ கூலியான 167 ரூபாயை முழுவதுமாக அளிக்க வேண்டும். முதியோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்.
மேலும் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலைத் திட்டப் பிரச்சினை, சட்டப்பூர்வ கூலி கிடைக்காதது, இதற்காக தொடங் கப்பட்ட வங்கிக் கணக்குகளில் ஏற்பட்ட குழப்பங்கள் இதனால் சம்பளம் பெறமுடியாத நிலை உள்ளது. இப்படி தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி அமைப்புகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் மே 27-ல் தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.