உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா பதிவுகளை, வாக்கு எண்ணிக்கை முடிந்து 10 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டும் கேமரா பதிவுகளை தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. இதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யக்கோரி பல வேட்பாளர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு டிச. 30-ல் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை முடிந்து 10 மணி நேரத்தில் (ஜனவரி 3 மாலை) சிசிடிவி கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இருப்பினும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சிசிடிவி கேமரா பதிவுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதனால் அவற்றை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்து 2 நாள் ஆகிவிட்டன. அதன் பிறகும் சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்யாதது தவறு. எனவே இன்று மதியத்துக்குள் சிசிடிவி கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.