கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று காலை நடந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற திமுகவினர் 8 பேர், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக தலா ஒருவர், அதிமுக 5 பேர், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேர் என 19 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் ஆதரவாக இருக்கும் 14வது வார்டு உறுப்பினர் ராமர், 17வது வார்டு உறுப்பினர் செந்தில் முருகன் ஆகிய 11 பேர் பதவி ஏற்று விட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெளியே நின்ற வேனில் ஏறினார்.
அப்போது அங்கு கூடி இருந்த அதிமுகவினர் சுயேட்சைக் உறுப்பினர்களை திமுகவினர் கடத்துவதாக கூறி வேனை மறித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி ஜெபராஜ், காவல் ஆய்வாளர்கள் சுதேசன் ஐயப்பன் பத்மாவதி மற்றும் போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேனுக்கு வழிவிட செய்தனர்.
இதையடுத்து அதிமுகவினர் நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் எட்டயபுரம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.