தமிழகம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் முரண்பட்ட வெப்பநிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவியது. அதன் காரணமாக அதிகாலை நேரங்களில் சாலையில் வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்பட்டது.

விமான சேவை பாதிப்பு

சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வரவேண்டிய பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்நிலையில் நேற்று காலை பனிப்பொழிவு குறைந்திருந்தது. மேலும் சில இடங்களில் மழைப்பொழிவும் இருந்தது.

அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சிவகிரியில் 5 செ.மீ. மழை

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் 5 செ.மீ, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 4 செ.மீ, ராஜபாளையத்தில் 3 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், மதுரை மாவட்டம் பேரையூரில் தலா 2 செ.மீ, சோத்துப்பாறை, கீழ் கோதையார் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT