தமிழகம்

சென்னை, திருச்சி விமான நிலையங்களில் ஒரே நாளில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்புள்ள 5.2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கடத்தி வந்த 2 பயணிகளும் உடந்தையாக இருந்த தனியார் விமான நிறுவன ஊழியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது விமானத்தில் வந்த அக்பர் பாஷா என்பவர், 2 கருப்பு நிற பார்சல்களை தனியார் விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்தார். அதைப் பார்த்த அதிகாரிகள், பயணி மற்றும் ஊழியரைப் பிடித்து விசா ரித்தனர். பார்சலில் செல்போன் மற் றும் டேப்லெட் இருப்பதாக அக்பர் பாஷா தெரிவித்தார். சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தனர். பார்சலில் 4 கிலோ எடையுள்ள 40 தங்கக்கட்டிகள் (தலா 100 கிராம்) இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணி மற்றும் ஊழியரை கைது செய்தனர்.

இதேபோல சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த சுல்தான் இப்ராஹிம் என்பவரும் கருப்பு நிற பார்சலை தனியார் விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்துள்ளார். இதை கவனித்த அதிகாரிகள், விரைந்து சென்று பார்சலை பிரித்துப் பார்த் தனர். அதில் புத்தகங்களின் இடையே 1.2 கிலோ எடையுள்ள 12 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இப்ராஹிமையும் விமான ஊழி யரையும் கைது செய்தனர்.

ஒரே நாளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான 5.2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட தும், கடத்தலுக்கு தனியார் விமான ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில்..

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் நள் ளிரவு திருச்சிக்கு வந்தது. அதில் பயணித்தவர்கள், அவர்களின் உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது கழுத்து, கைகளில் அளவுக்கு அதிகமாக தங்க ஆப ரணங்களை அணிந்திருந்த 2 பெண் களை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மலேசியா விலுள்ள சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் இந்திராணி (58), லூர்துமேரி (75) என்பது தெரியவந் தது. மேலும், இவர்கள் அணிந் திருந்த ஆடைகளின் உள்பகுதிகளி லும் சில தங்க ஆபரணங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இகுறித்து சுங்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்திராணி, லூர்துமேரியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 7 லட்சத்து 49 ஆயிரத்து 795 ரூபாய் மதிப்புள்ள 4.082 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தலின் பின்னணியில் உள்ள நபர் கள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT