தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு

இ.மணிகண்டன்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 91,907 பேர் இன்று (திங்கள்கிழமை) காலை பதவியேற்றனர்.

அதன்படி, விருதுநகர் மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முறைப்படி இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி நிர்வாக பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்பு விழா விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 20 பேரும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதேபோன்று விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அந்தந்த பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அந்தந்த மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு செய்கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களும் தங்கள் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்து கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்,

SCROLL FOR NEXT