தமிழகம்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

செய்திப்பிரிவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.nta.ac.in / www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் கடந்த கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாளான் டிசம்பர் 30-ம் தேதி என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை ஜனவரி 6-ம் தேதி (இன்று) நள்ளிரவு 11.50 மணி வரையும், ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்தும் காலத்தை டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து ஜனவரி 7-ம் தேதி (நாளை) நள்ளிரவு வரையும் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதுவரை தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் வரும் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை செய்யலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகம் உட்பட நாடுமுழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என நாடுமுழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக அனைத்து மாநில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வசதியாக தகவல் தொகுப்பு நீட் தேர்வு நடைபெறும் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 9 மொழிகளில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT