தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 91,907 பேர் இன்று காலை பதவி ஏற்கின்றனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 11-ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 7-ம் தேதி அறி
விக்கப்பட்டது. 314 ஊராட்சி ஒன்றியங்களில் 9, 624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 91,975 பதவிகள் உள்ளன.
இதில் 39 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் அப்பதவிகளுக்கான தேர்தல் நடக்கவில்லை. வேட்பாளர் மரணம் காரணமாக 3 பதவிகளுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது.
மீதம் உள்ள 91,932 பதவிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தன. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி வரை நீடித்தது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் வேட்பாளர்கள் சிலரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால், 25 பதவிகளுக்கான வாக்குகளை எண்ணுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனால் 513 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 5 ஆயிரத்து 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளிட்ட மொத்தம் 91,907 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு, சான்றிதழ்களும் அன்றே வழங்கப்பட்டு விட்டன.
அதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் 6-ம் தேதி (இன்று), அவரவர் அலுவலகங்களில் காலை 10 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி கிராம ஊராட்சிகளில், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக, முதலில் ஊராட்சித் தலைவர் பதவியேற்க வேண்டும். அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அவர்களில் மூத்த உறுப்பினரை பதவியேற்றுக் கொள்ள அழைக்க வேண்டும். அவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக, தாமாகவே பதவியேற்றுக் கொள்ள வேண்டும். மூத்த உறுப்பினர் முன்னிலையில் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.
அதேபோல மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக தாமாகவே பதவியேற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் மூத்த உறுப்பினர் முன்னிலையில் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும்.
கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் நடக்கும் பதவியேற்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ஊராட்சி கூட்ட நடவடிக்கை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மறைமுகத் தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல், வரும் 11-ம் தேதி நடக்கிறது. மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், அந்தந்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களும் தங்கள் ஒன்றியங்
களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மேலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்து, கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலும் 11-ம் தேதி நடக்க உள்ளது.