தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கட்சியை வலுப்படுத்த வேண்டும்: தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கட்சியை வலுப்படுத்த வேண்டும், ஒவ்வொரு தொகுதியிலும் தலா 50 ஆயிரம் வாக்குகள் பெற இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டுமென தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையே, நேற்று நடந்த தேமுதிக செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிகவின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, ‘‘விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடக்கவுள்ள ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற வறுமை ஒழிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு தாராளமாக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உள்ளூரில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து போராட்டங்கள் நடத்த வேண்டும். ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற நிகழ்ச்சியில் 32 மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

தூய்மைப் பணியில்..

இரவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். பகல் நேரத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் தொண்டர்களுடன் சேர்ந்து அவர்களின் எல்லைக்குட்பட்ட பள்ளிகள், பேருந்து நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 50 ஆயிரம் வாக்குகளை பெறும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். மதுவிலக்கு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்’’ என்றனர்.

மேலும் சில நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், தற்போதைக்கு தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை வேண்டாம். அடுத்தடுத்து நடக்கும் கூட்டத்தில் இது பற்றி விரிவாக பேசலாம். முதலில் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென விஜயகாந்த் கூறியுள்ளார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT