கோப்புப்படம் 
தமிழகம்

குடியுரிமை சட்டம் தொடர்பாக அன்வர் ராஜா விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜன.2-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தை திமுக கைப்பற்றியது. அம்மாவட்டத்தில், அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் மகள் மற்றும் மகன் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, ‘‘குடியுரிமைச் சட்டத்தால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாகக் குறைந்துள்ளது. தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே எனது மகளை சொந்த ஊரிலும் முஸ்லிம் வாழும் பகுதியில் யாரும் போட்டியிட வராத நிலையில் என் மகனையும் நிறுத்தினேன்.

போர்க்களத்துக்குப் போனால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்த நிலையில் தோற்றாலும் பரவாயில்லை என்று அதிமுகவுக்காக என் மகளையும் மகனையும் அனுப்பி தோல்வியை ஏற்றுக் கொண்டேன்’’ என்றார்.

இந்நிலையில், அன்வர் ராஜாவின் பேச்சு குறித்து, தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘அவர் அதிமுகவில் இருப்பவர். எனக்கு நல்ல நண்பர். கட்சியில் இருந்து கொண்டு வெளியில் விமர்சிக்கக் கூடாது.

கட்சிக்குள் விமர்சனம் இருக்கலாம். வெளியில் சொல்லக் கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். நான் முடிவெடுக்க முடியாது’’ என்றார்.

SCROLL FOR NEXT