புற்றுநோயின் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க விரிவான மருத்துவ சேவை, வசதிகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகனும், அடையாறு புற்றுநோய் மையத்தின் இணை நிறுவனருமான டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின், நூற்றாண்டு நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
‘இந்தியாவில் புற்றுநோய் சவால்கள் மற்றும் தடுக்கும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:
இந்தியாவில் டெல்லி, கேரளா, அசாம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல், புற்றுநோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை அதிகமாக காணப்படுகின்றன.
புகையிலை பயன்பாடு தவிர்த்தல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு புகையிலை பொருட்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, புகையிலையின் பயன்பாட்டை தவிர்த்தால், அதுசார்ந்து ஏற்படக்கூடிய புற்றுநோய்களை தடுக்கலாம். உடல் பருமன், காற்று மாசு, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
புற்றுநோயால் 1990-ம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, நாட்டின் மொத்த இறப்பு வீதத்தில், 8.3 சதவீதம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை, அடுத்த 20 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும். அத்தகைய புற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து மக்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கும் விரிவான மருத்துவ சேவைகள், வசதிகள் அவசியம். அத்தகைய வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.
அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்தால்..
அனைத்து தரப்பு மக்களையும் ஒரே மாதிரியான தரமான சிகிச்சைகள் சென்றடைய வேண்டும் என்பது பொது
வான கருத்து. ஆனால், யதர்த்த நிலை அப்படி அமையவில்லை. அந்த நிலையை உருவாக்க உலகளாவிய மருத்துவ சேவை திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். இத்திட்டம் அனைத்துதரப்பும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா, துணை தலைவர் ஹேமந்த் ராஜ், பல்கலைக்கழக மாணவ நலப்பிரிவின் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.