உள்ளாட்சித்தேர்தலில் பணம் செலவழித்தும் தோற்றுப் போனதால் கடும் ஆத்திரமடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்ட, அவருக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளாட்சித்தேர்தல் பல சுவாரஸ்யங்களை கண்டுவருகிறது. இந்தத் தேர்தலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவு கோடிகளில் செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. வேட்பாளர்கள் எப்படியும் வென்றுவிட வேண்டும் என பணத்தை அள்ளித்தெளித்தனர். என்ன செலவு செய்தாலும் ஒருவர்தான் வெல்ல முடியும்.
தோற்றவர் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு போக வேண்டியதுதான். அப்படி போக எண்ணமில்லாத சிலர் வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘ இப்படி செய்வீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை போகட்டும் நன்றி’ என ஒருவர் போஸ்டர் ஒட்ட ஒருவர் ஒருபடி மேலேபோய் ‘ காசு வாங்கின நாயே ஓட்டுப்போட்டாயா?’ என போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தோற்றுப்போனதால் கடும் கொதிப்படைந்த வேட்பாளர் ஒருவர் ரியாக்ஷன் அப்படி வெளிப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்தும் தோற்றுப்போயிருப்பார் போலிருக்கு அந்த ஆற்றாமையால் அவர் திட்டி போஸ்டர் அடித்து ஊர் முழுதும் ஒட்டியுள்ளார். அதுவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதை மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு படத்தை வைத்து “ காசு கொடுத்த நாயி உனக்கெதுக்குடா ஓட்டு போடணும், நேர்மையா நின்னு ஜெயிக்க துப்பில்ல இதில் ரோசம் ஒரு கேடா’ என கிண்டலடித்து போட்டுள்ளது வைரலாகி வருகிறது. இது வாக்காளர்கள் ஓட்டுப்போட காசு வாங்க மாட்டோம் எனும் நல்ல மெசேஜை சொல்லுவதாக உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது ' இப்பவே கண்ண கட்டுதே, இன்னும் என்னென்ன செய்யப்போறானுங்களோ’ ன்னு வடிவேல் பாணியில் கேட்கத்தான் தோணுது.