தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்ப்பது ஏன் என்று விளக்கமளித்துள்ளார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.
முன்னதாக இன்று காலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
மக்களின் வெறுப்பு வெளிப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பற்றி பேசிய அவர், "ஆளுங்கட்சியினுடைய அதிகாரம், பணபலம் அனைத்தையும் தாண்டி மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்றால் அவ்வளவு தூரம் இந்த அரசின் மீது வெறுப்புடனும். கொதிப்புடனும் இருக்கிறார்கள் என்றே அர்த்தம்" எனக் கூறினார்.
குடிமக்கள் பதிவேட்டை எதிர்ப்பது ஏன்?
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்ப்பது ஏன் என்ற கேள்விக்கு, "மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையில் முந்தைய கணக்கெடுப்பிலிருந்து ஏறக்குறைய ஆறு, ஏழு புதிய கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
அந்தக் கேள்விகளுக்கான நோக்கம் என்ன என்பது தெரிய வேண்டும். பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு, தற்போதைய மக்கள் தொகை பதிவேடு வேறு. இந்த பதிவேடு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது ஆகையால் தான் இதனை எதிர்கிறோம்" என்றார்.
அரசியல் சாசனம் அனுமதிக்காததை சட்டமாக்கலாமா?
தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி பேசிய அவர், "குடியுரிமைச் சட்டத்தை எந்தவிதமான காரணமும் சொல்லாமல் மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும். இந்த உணர்வைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் இன்றைக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பள்ளிகள், கல்லூரிகள் எல்லாவற்றையும் பூட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி இன்றைக்கு இந்த சட்டத்தின் மீதான எதிர்ப்பை நாடு முழுவதும் அன்றாடம் பல லட்சம் மக்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம். இப்படி ஒரு சட்டத்தை அரசியல் சாசனத்தின்படி நிறைவேற்றவே முடியாது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்" எனக் கூறினார்.