அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
பி.ஹெச்.பாண்டியன், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் 1945-ம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற பி.ஹெச்.பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
பின்னர் அதிமுகவில் இணைந்து, 1977, 1980,1984 ஆகிய ஆண்டுகளில் அக்கட்சி சார்பாகப் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-ம் ஆண்டில், தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இருந்தார். 1985-1988 ஜனவரி வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகப் பதவி வகித்தார். பின்னர் 1999-ம் ஆண்டில் நெல்லை மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலமான சமயத்தில், அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்தது. அப்போது 1989-ம் ஆண்டில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரு அணிகளும் தனித்துப்போட்டியிட்டன. இதில், ஜானகி அணி சார்பாகப் போட்டியிட்ட பி.ஹெச்.பாண்டியன், சேரன்மாதேவி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். ஜானகி அணியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன்.
2016-ம் ஆண்டில் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு சசிகலாவை ஆதரிக்காமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலா முதல்வர் ஆகக்கூடாது என்று கடுமையாக எதிர்த்த பி.ஹெச்.பாண்டியன், ஜெயலலிதா இறப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தற்போது, அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பி.ஹெச்.பாண்டியன், இன்று (ஜன.4) காலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மகன் மனோஜ் பாண்டியன், 2001-ல் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.