தமிழகம்

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய திமுக

வி.சுந்தர்ராஜ்

உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பொறுப்பு வகித்து வருகிறார். இப்பகுதியில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பூதலூர், திருவையாறு, திருப்பனந்தாள், அம்மாபேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ளன.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த 7 ஒன்றியங்களில் உள்ள 138 வார்டுகளில் திமுக 89 இடங்களையும், அதிமுக 35 இடங்களையும், அமமுக 6 இடங் களையும் கைப்பற்றின. இதேபோல 7 ஒன்றியங்களில் உள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளில், ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுக இழந்துள்ளதால் அக்கட்சியினர் சோர்வடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல், அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதர வாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், கட்சியினர் பலரும் அதிருப்தியடைந்தனர். மேலும், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த எம்.ரெங்கசாமிக்கு இந்தப் பகுதியில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவர் அமமுகவுக்குச் சென்றபோது, பலரும் அவரின் பின்னால் சென்றுவிட்டனர். தற்போதுகூட அதிமுகவின் தோல்விக்கு அமமுக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளே காரணமாகி உள்ளன.

ஏற்கெனவே, திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவிடம் தொகுதியை பறிகொடுத்த நிலையில், கடந்த முறை தஞ்சாவூர் வடக்கு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுக தக்க வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் அவற்றையும் திமுகவிடம் பறிகொடுத்துள்ளது. அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊரான ராஜகிரியிலேயே ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக ஆதரவுபெற்ற வேட்பாளர் சமீமாபர்வீன் என்பவரிடம், அதிமுக ஆதரவுபெற்ற வேட்பாளர் பீபிஜான் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.

SCROLL FOR NEXT