மியூசிக் அகாடமியின் 14-வது நாட்டிய விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த பெல்ஜியம் நாட்டு தூதரகத்தின் (சென்னை) தலைமை அதிகாரி மார்க் வேன் டே வ்ரகன், பாரம்பரியமிக்க இந்தியக் கலைகளின் சங்கமமாக மியூசிக் அகாடமி திகழ்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மியூசிக் அகாடமியின் 14-வது நாட்டிய விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பெல்ஜியம் நாட்டு தூதரகத்தின் (சென்னை) தலைமை அதிகாரி மார்க் வேன் டே வ்ரகன் பிரபல நாட்டியக் கலைஞரான பிரியதர்ஷினி கோவிந்துக்கு மியூசிக் அகாடமியின் நிருத்ய கலாநிதி விருதை வழங்கி பேசியதாவது:
‘‘பாரம்பரியமிக்க இந்த அரங்கத்தில் பேசுவதற்கே சிறிது படபடப்பாகத் தான் இருக்கிறது. ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்பாக பாரம்பரியமான கலைகளை வளர்ப்பது, காப்பாற்றுவது, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது, கலைகள் குறித்த ஆவணங்கள், நூலகங்களைப் பராமரிப்பது என்பது போன்றவற்றை கொள்கைகளாகக் கொண்டு மியூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. அந்தக் கொள்கைகளிலிருந்து சிறிதும் தடம் மாறாமல் 100-வது ஆண்டை நோக்கி வெற்றி நடைபோட்டு, பாரம்பரியமிக்க இந்தியக் கலைகளின் சங்கமமாகத் திகழ்கிறது மியூசிக் அகாடமி.
விருதுபெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பாரம்பரியக் கலைகளின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மியூசிக் அகாடமி யின் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
முன்னதாக மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி வரவேற்புரையில், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னைக்கான பெல்ஜியம் தூதரகத்தின் தலைமை அதிகாரியான மார்க் வேன் டே வ்ரகனின் பல்வேறு நாடுகளில் தூதரக அதிகாரியாக இருந்து செயல்பட்ட சிறப்பான தருணங்களை பாராட்டிப் பேசினார். அத்துடன் மியூசிக் அகாடமியின் 14-வது ஆண்டு நாட்டிய விழாவில் இளம் கலைஞர்கள் மூத்த கலைஞர்களிடம் இருந்து பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் கலந்துரையாடல், குழு விவாதம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதைக் குறிப்பிட்டார்.
‘நிருத்ய கலாநிதி’ விருதைப் பெற்ற பிரியதர்ஷினி கோவிந்த் தனது ஏற்புரையில், ‘‘என்னுடைய குரு சுவாமி மலை கே.ராஜரத்னம், குரு கலாநிதி நாராயணன் ஆகியோரின் பண்பட்ட பயிற்சி, சக கலைஞர்கள், ரசிகர்கள், குடும்பம் எல்லோரும் காட்டிய ஆதர வால்தான் நான் இந்த மேடையில் நிற் கிறேன். மியூசிக் அகாடமி வழங்கியிருக் கும் இந்த விருதின் மூலம் பாரம்பரிய மான இந்தக் கலை வடிவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கடமையும் எனக்கு அதிகரித்திருப்பதாக நினைக் கிறேன்’’ என்றார். நிறைவாக மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பி னர் சுஜாதா விஜயராகவன் நன்றியுரை வழங்கினார்.