தமிழகம்

அதிகாலையில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி: கடலோர, உள் மாவட்டங்களில் பொங்கல் வரை பனிப்பொழிவு நீடிக்கும்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை முடிவடை யும் தருவாயில் உள்ள நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தொடங் கியுள்ளது. நேற்று அதிகாலை 4 மணி முதல் காலை 6.30 மணி வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர நகரங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவியது.

இதனால் சாலை சரியாக தெரி யாமல் வாகன ஓட்டிகள் வாகனங் களை மெதுவாகவும், முகப்பு விளக்கை எரியவிட்டபடியும் இயக்கினர். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்த விமானங்கள் தரையிறங்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமானது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வலு குறைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் நிலக்காற்றும் வலு குறைந்து காணப்படுகிறது. நிலப்பகுதியில் இருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைவது இயல்பான நிலையாகும். ஆனால் தற்போது தரை பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் உயரம் வரை வெப்பநிலை உயர்ந்தும், அதற்கு மேல் வளிமண்டலத்தில் வெப்பநிலை குறைந்தும் நிலவுகிறது.

இந்த வெப்பநிலை முரண் கார ணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் ஏற்படும். இதனால் சாலைகளில் காட்சியில் தெளிவின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய உதயத்துக்கு பிறகு பனி விலகிவிடும். இது இந்த காலகட்டத்தில் ஏற்படும் வழக்கமான நிகழ்வுதான். இந்த பனிப்பொழிவு வரும் பொங்கல் திருநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய கர்நாடக மாநில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 4 செமீ, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 3 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், நடுவட்டத்தில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT