தமிழகம்

புதுச்சேரி சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக இருளருக்கு அட்டவணை: சாதி சான்றை வீட்டுக்கே சென்று வழங்கிய அதிகாரிகள்

செ.ஞானபிரகாஷ்

சாதி சான்றிதழ் வேண்டி போராடி வந்த இருளர்களுக்கு அட்டவணை பழங்குடியின சாதி சான்றிதழை சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக வீட்டுக்கே சென்று வருவாய் துறை அதிகாரிகள் வழங்கினர்.

இதன் மூலம் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் எங்கள் இன மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
புதுச்சேரியில் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது, சாதி சான்றிதழ் வேண்டி பழங்குடியின மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுதந்திரத்துக்கு பிறகு இருளர் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு கூனிச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வாழ்ந்துவரும் 46 இருளர் குடும்பத்தினருக்கு ஜாதிச் சான்றிதழை வில்லியனூர் வட்டாட்சியர் மகாதேவன் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினார்.


பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் கூறுகையில், “புதுச்சேரியில் இருளர் மக்கள் இருந்தனர். அங்கீகரிக்கப்படாமல் இருந்தனர். சாதி சான்றிதழ் தேவையாக இருந்தது. நீண்டகாலமாக அதாவது 36 ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு வந்தோம். தற்போது மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் சுதந்திரத்துக்கு பிறகு இருளர் பழங்குடியின மக்களுக்கு அட்டவணை பழங்குடியின சாதி சான்றிதழ் முதல்முறையாக கிடைத்துள்ளது.

மத்திய அரசு அங்கீகரித்து அதன் மூலம் புதுச்சேரியில் தர ஒப்புதல் கிடைத்துள்ளது. அத்துடன் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வந்துள்ளோம். இதன் மூலம் இருளர் இன மக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT