ராமநாதபுரம் ண்டபம் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் அன்வர்ராஜா மகளைத் தொடர்ந்து மகனும் தோல்வியடைந்தார்.
அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி அதிமுக சார்பில் மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 16-வது வார்டில் போட்டியிட்டார். இந்த வார்டுக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இங்கு பதிவான வாக்குகள் 3,532, இதில் நாசர் அலி 985 வாக்குகளும், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தவ்பீக் அலி 1,968, அமமுக வேட்பாளர் இஸ்மத் நூன் 370 வாக்குகள் பெற்றார்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முன்னாள் எம்பியும், அதிமுக சிறுபான்மை பிரிவுச் செயலாளருமான அ.அன்வர்ராஜாவின் மகள் அதிமுக சார்பில் ராவியத்துல் அதபியா போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
மொத்தம் பதிவான வாக்குகள் 4,505, இதில் ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும், சுப்புலெட்சுமி 2,405 வாக்குகளும் பெற்றனர். ராவியத்துல் அதபியா டெபாசிட் இழந்தார். வெற்றி பெற்ற சுப்புலெட்சுமி மண்டபம் ஒன்றிய திமுக செயலாளர் ஜீவானந்தத்தின் மனைவியாவார்.
சிஏஏ எதிரொலி:
ஒரே ஒன்றியத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள இரண்டு வார்டு பகுதிகளில் அன்வர்ராஜாவின் மகனும், மகளும் போட்டியிட்டனர்.
ஆனால் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்ததால் இருவரும் தோல்வியுற்றதாக அன்வர்ராஜாவே தெரிவித்தார்.