தேனி மாவட்டம் க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அதிமுக, திமுக இருகட்சிகளும் சமநிலையில் இருப்பதால் தலைவர் பதவிக்கான தேர்வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எதிரணியினரை இழுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.
தேனி மாவட்டம் க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 14 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. இப்பதவிகளுக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.
திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக, திமுக கட்சிகள் தலா 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
1,2,3,4,,7,11,12ஆகிய வார்டுகளில் அதிமுக. வேட்பாளர்கள் எஸ்.சந்திரா, அன்னபூரணி, ப.சேகரன்,ரா.நாகராணி, ஸ்கைலாப்புராணி, சிலம்பரசன், முருகன் ஆகியோரும், 5,6,8,9,10,13,14 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வே.உமாமகேஸ்வரி, மு.மச்சக்காளை, தமிழ்ச்செல்வன், பிரபாகரன், அமுதவள்ளி,கவிதா,சித்ரா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இருகட்சிகளும் சமநிலையில் இருப்பதால் ஒன்றியக்குழுத் தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வெற்றி பெற்றவர்களுக்கு பதவிஏற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 11ம் தேதி ஒன்றியத்தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட மறைமுகத்தேர்தலும் நடைபெற உள்ளது. மெஜாரிட்டி அடிப்படையில் இப்பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.
தற்போது இரு கட்சிகளும் சமபலத்தில் உள்ளதால் எதிரணியினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. தங்கள் அணிக்கு வந்தால் துணைத் தலைவர் பதவி மற்றும் சில பொருளாதாரச் சலுகைகளையும் அளிப்பதாக தூண்டில் போட்டு வருகின்றனர்.