கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம், நேரலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். இதில் வேட்பாளர்கள் வீணா மற்றும் யுவஸ்ரீ ஆகியோர் தலா 849 வாக்குகளை சரிசமமாகப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்தனர். இதற்கு இரண்டு வேட்பாளர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இன்று (ஜன.3) காலை 9 மணி வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ஜெய்சங்கர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்ற இரண்டு வேட்பாளர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஒப்புக்கொண்டனர். வட்டாட்சியர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.
இரண்டு வேட்பாளர்கள் சார்பில் பொதுவாக ஒரு நபர் குலுக்கல் சீட்டு எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எடுக்கப்பட்ட குலுக்கல் சீட்டில் வீணாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து வேட்பாளர் வீணா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கான வெற்றிச் சான்றிதழை வேப்பனப்பள்ளி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். முன்னதாக இந்நிகழ்வுகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.