அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 4-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 27 வயது இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (ஜன.2) தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது.
செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 4-வது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ள ஆ.தமிழ்மாறன் (27) போட்டியிட்டார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இங்கு அதிமுக சார்பில் ராதா என்பவரும், சுயேச்சையாக சிதம்பரம் என்பவரும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை, செந்துறை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்மாறன் 1,934 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராதா 1,256 வாக்குகளும் பெற்றனர். இதில் 678 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்மாறன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டார்.
இளைஞர் ஒருவர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, செந்துறை ஒன்றிய அரசியல் வட்டாரத்தில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.