கோவை மேற்கு மண்டலத்தில் இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
சமீப காலமாக இளம் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. காவல் நிலையங்களில் தினசரி பதிவாகும் குற்ற வழக்குகள் போல், இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவாவது தற்போது தொடர் கதையாகிவிட்டன.
மேற்கு மண்டலத்தில் இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் கடந்த 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டு அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைவான பெண்கள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டால் போக்சோ பிரிவில் சம்பந்தப்பட்ட எதிரிகள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கப்படுகிறது. 2018-ல் 350 ஆக இருந்த போக்சோ வழக்குகள் 2019-ம் ஆண்டு 452 ஆக உயர்ந்துள்ளன.
இது தொடர்பாக காவல்துறை யினர் கூறும்போது,‘‘கோவை புறநகர், திருப்பூர் புறநகர், சேலம் புறநகர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மேற்கு மண்டலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ பிரிவில் மொத்தம் 424 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், கோவை புறநகரில் 53, ஈரோட்டில் 74, திருப்பூரில் 41, நீலகிரியில் 29, சேலம் புறநகரில் 65, நாமக்கல்லில் 44, தருமபுரியில் 54, கிருஷ்ணகிரியில் 64 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுவே, கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் 327 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதில், கோவையில் 34, ஈரோட்டில் 49, திருப்பூரில் 32, நீலகிரியில் 32, சேலத்தில் 76, நாமக்கல்லில் 30, தருமபுரியில் 27, கிருஷ்ணகிரியில் 40 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கோவை மாநகரில் போக்சோ பிரிவில் 2018-ம் ஆண்டு 23 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 28 வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளது. தவிர, 18 வயதுக்கு மேற்கண்ட பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு 17 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன,’’ என்றனர்.
சமூகஆர்வலர்கள் சிலர் கூறும்போது,‘‘2018-ஐ ஒப்பிடும் போது, 2019-ல் தருமபுரியில் 27, ஈரோட்டில் 25, கிருஷ்ணகிரியில் 24, கோவை புறநகரில் 19, நாமக்கல்லில் 14, திருப்பூரில் 9, கோவை மாநகரில் 5 வழக்குகள் என 134 போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இதில், விதிவிலக்காக சேலத்தில் 11, நீலகிரியில் 3 வழக்குகள் குறைந்துள்ளன. பாலியல் தொல்லைகளை தடுக்க உரிய விழிப்புணர்வை காவல்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.
விழிப்புணர்வு தொடர்கிறது
குழந்தைகள் நல அலுவலர்கள் கூறும்போது,‘‘ சிறுமிகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதை தடுக்க பாலியல் சார்ந்த குற்றங்கள் என்றால் என்ன?, நல்ல தொடுதல், தவறான தொடுதல், பாலியல் தொந்தரவுகள் இருந்தால் யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது போன்றவை குறித்து இளம் பெண்கள், சிறுமிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இளம் பெண்கள், சிறுமிகளின் நடவடிக்கையை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தனிமையை விரும்பும் சிறுமிகள், பெண்களிடம் அவர்களது பெற்றோர் இயல்பாக பேச்சுக்கொடுத்து குறைகளை கேட்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டால் தயக்கமின்றி காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்,’’ என்றனர்.
உரிய நடவடிக்கை
கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும்போது,‘‘இளம்பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அது தொடர்பான புகார்கள் மீது தாமதமின்றி வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்,’’ என்றார்.
கோவை மேற்கு மண்டல ஐஜி கே. பெரியய்யா கூறும்போது,‘‘பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறையினர் மூலம் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.விழிப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கின்றனர். பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் தேவையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது,’’ என்றார்.