கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி,பரங்கிப்பேட்டை, அண்ணாகிரா மம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, விருத்தாசலம், நல்லூர், முஷ்ணம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியத்துக்கான ஊராக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று 14 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக காத்துக் கிடந்தனர்.வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், பேனா போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மேலும்முகவர்களை தவிர மற்றவர்களை போலீஸார் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மாலை 6 மணிக்குப் பிறகே கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் இரவு 8 மணியைக் கடந்தும் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
இரவு 8 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 287 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக கூட்டணியில் அதிமுகவினர் 24 பேரும், தேமுதிகவினர் 2 பேரும், பாமகவினர் 3 பேரும், பாஜக ஒருவரும் வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணியில் திமுகவினர் 17 பேர் வெற்றி பெற்றனர். சுயேச்சை 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 15 , தேமுதிக 2 , பாமக 3, திமுக 2, சுயேச்சை 3 முன்னிலையில் உள்ளனர். இதேபோல் மாவட்ட ஊராட்சிகவுன்சிலர் பதவிகளில் அதிமுக 4, திமுக 3, பாமக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன.