ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு 8 மணி வரையான முடிவுகளின் படி திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
குமரி மாவட்டத்தில் 11 மாவட்டஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 111 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கும் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் மின்னணு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்ற மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் வேகமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. விவரங்கள் மாலை 4.15 மணிக்கே அறிவிக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 வார்டுகளின் முடிவுகள் வெளியாகின. மேல்புறத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அம்பிளி, முஞ்சிறையில் காங்கிரஸ் வேட்பாளர் லூயிஸ், கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோபி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொத்தமுள்ள 111 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 57 முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் 17, திமுக 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 1 என, திமுககூட்டணி 31 இடங்களில் வெற்றிபெற்றது. அதிமுக 10, பாஜக 11 என அதிமுக கூட்டணி 21 இடங்களில் வெற்றிபெற்றது. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றிபெற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 174 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் இரவு 8 மணி வரை 64 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக 28, மதிமுக 3 என திமுக கூட்டணி 31 வார்டுகளில் வெற்றிபெற்றது. அதிமுக 21, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 22 வார்டுகளில் வெற்றிபெற்றது. இதுதவிர, அமமுக 4, சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். முழுமையான முடிவுகள் இன்று பகலில்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில், 11-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றார். நேற்று இரவு 9 மணி வரையான முடிவுகளின்படி, பாஜக 2, திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தலா 1 வார்டில் வெற்றி பெற்றுள்ளன.