வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 6-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்ரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 6-ம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும். காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரூ.500, ரூ.200 என கட்டண தரிசனங்களும், இலவசமாக பொதுதரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும் வழிகள், வெளியேறும் வழிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைப்படம் 4 மாட வீதிகளில் சந்திக்கும் இடங்களில் வைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களிக்கும் வண்ணம் எல்இடி திரைகள் தென்மாட வீதியில் அமைந்துள்ள கோயில் நூலகத்தின் அருகிலும் மேற்கு கோபுர வாசல் அருகிலும் மற்றும் கோயில் பின்பகுதியிலும் வைக்கப்பட உள்ளன.
அவசர உதவிக்காக சிறப்பு மருத்துவக் குழு செயல்படும். 2 ஆம்புலன்ஸ்களும், மொபைல் முதலுதவி குழுக்களும் தயார் நிலையில் இருக்கும். பக்தர்கள் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்குளத்தின் அருகில் 2 மொபைல் கழிப்பறைகள் வைக்கப்பட உள்ளன.
பக்தர்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே மூலம் சிறப்பு ரயில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம், கீதை ஸ்லோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம் மற்றும் மூலவர் வேங்கடகிருஷ்ணன் படம் ஆகியவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள பாரதியார் இல்லத்தில், தகவல் மையம் செயல்படும். மூத்த குடிமக்களுக்கு முன் கோபுர வாசல் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையும், மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரையும் தெற்கு மாட வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டண சீட்டை, சனிக்கிழமை பகல் 1 மணிக்கு ஆதார் அட்டை நகலை காண்பித்து ஒரு நபருக்கு ஒரு சீட்டு என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் பாஸ்கர் கூறும்போது, “பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 60 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 500 முதல் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பார்த்தசாரதி சுவாமி கோயிலின் துணை ஆணையர் (பொறுப்பு) மு.ஜோதிலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.