தமிழகம்

அமைதியான வாக்கு எண்ணிக்கை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் தகவல்

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் நேற்றிரவு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது அக்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். வன்முறையில் அளவு கடந்த நம்பிக்கையுடையவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், தற்போது அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளனர். அப்படி இருக்கும்போது எப்படி முறைகேடு நடைபெறும். மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது ஸ்டாலின் வேண்டுமென்றே குற்றம்சாட்டி வருகிறார்” என்றார்.

SCROLL FOR NEXT