உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தொடர்ந்த அவசர வழக்கை நேற்றிரவு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் இன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.
தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், “பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், திமுக வெற்றி பெற்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முறையாக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக முடிவுகளை அறிவிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு வருகிறது” எனக் கூறி திமுக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடர்ந்தது.
திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவுப்படி, நேற்றிரவு 9 மணிக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பாக நடந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
மேலும் அவர் வாதிடும்போது, “உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த விதிமுறை மீறல்களோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை. சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் பாதுகாப்பு என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தங்களது கடமையை சட்டப்படி சரியாக செய்து வருகின்றனர். மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெறுமனே உள்ளது" என வாதிட்டார்.
அதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி“உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். எந்த முறைகேடுகளுக்கும் வாய்ப்புஅளிக்கக் கூடாது. மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் இன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை இன்று மாலைக்கு தள்ளிவைத்தார்.
நேற்றிரவு 10.45 மணி வரைநடந்த இந்த வழக்கு விசாரணையின்போது மாநில தேர்தல் ஆணையச் செயலர் எல்.சுப்பிரமணியன், வழக்கறிஞர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகளும், மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி எம்பி, திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் கிரிராஜன் உள்ளிட்டோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
ஸ்டாலின் மீண்டும் முறையீடு
உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதால் இதுகுறித்து மீண்டும் புகார் அளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில ஆணையத்துக்கு சென்றார். அப்போது திமுக முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.