ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிடக் கோரி எஸ்ஆர்எம்யு சார்பில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரயில்வே ஊழியர்கள் படம்: பு.க.பிரவீன்  
தமிழகம்

ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தனியார் மயத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ரயில்வே துறையில் பயணிகள், ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிடக் கோரி எஸ்ஆர்எம்யு சார்பில் சென்னை சென்ட்ரல் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வேயில் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனியார் ரயில்கள் இயக்கம், ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு, நிரந்தரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை எஸ்ஆர்எம்யு நடத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே எஸ்ஆர்எம்யு சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்றவர்கள் ரயில்வே துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட செயலாளர் பால்மாக்ஸ்வெல் ஜான்சன் கூறுகையில், ‘‘மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், அவற்றைக் கைவிட வலியுறுத்தியும் வரும் 8-ம் தேதி நாடுமுழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

அதன் முன்னோட்டமாக ஜனவரி 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ரயில்வேயில் தனியார் மயமாக்கலால், ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ரயில் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, தனியார்மயமாக்கல் முயற்சியை மத்திய ரயில்வே துறை கைவிட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT