தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. அதிமுக கூடுதல் இடங்களையும் , அதற்கு இணையாக 2-வது இடத்தில் திமுகவும் வெற்றி பெறும் சூழல் தற்போது உள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 1996-க்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக முறையாக நடந்து வந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு பல்வேறு காரணங்களைக்கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது.
தொகுதி, வார்டு வரையறை, இட ஒதுக்கீடு முறையாக இல்லை என நடந்த வழக்கில் இறுதியாக உச்ச நீதிமன்றக் கெடுவை அடுத்து தேர்தல் நடத்தும் அறிவிப்பாணை டிசம்பர் மாதம் வெளியானது. ஆனால் மாநகராட்சி நகராட்சிகளுக்கு தேர்தல் இல்லை, ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் என அறிவிக்கப்பட்டது.
வாக்குச்சீட்டு அடிப்படையில் இந்தத் தேர்தல் நடந்தது. அதுவும் 4 வாக்குச்சீட்டுகள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதனால் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சீட்டுகளைப் பிரித்து, அடுக்கி, அதைப் பிரித்து எண்ணி, முடிவை அறிவிக்க வேண்டும். ஆகவே வாக்கு எண்ணிக்கை முடிய, முழுமையாக முடிவு வர நள்ளிரவு அல்லது நாளை காலை வரை ஆகலாம்.
தற்போது 5,090 ஒன்றிய கவுன்சிலர் 515 மாவட்ட கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
தற்போது 12 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சில்களில் முன்னணி நிலவரம்.
மொத்த மாவட்ட கவுன்சில் இடங்கள் 515. இதில் தற்போது இரவு 12 மணி நிலவரப்படி 398 இடங்கள் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. 200 இடங்களிலும் திமுக 197 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் மொத்தம் 5090 ஆகும். இதில் 2841 இடங்களுக்கான முன்னிலை தெரியவந்துள்ளது. இதில் திமுக 1367 இடங்களிலும், அதிமுக 1198 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
அதிமுக, திமுக இரண்டுக்கட்சிகளும் போட்டிப்போட்டு அருகருகில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நள்ளிரவிலும் நீடிக்கும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளதை அடுத்து விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடக்கும். காலையில் பெரும்பாலான முடிவுகள் தெரியவரும்.
12 மணி நிலவரம்:
முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை:
ஊராட்சி ஒன்றியம்: 1950/5090
அதிமுக 665, பாஜக 25, தேமுதிக 44, பாமக 0, திமுக 860, காங்கிரஸ் 49, சிபிஎம் 10 சிபிஐ 26, இதரவை 274
மாவட்ட கவுன்சில்:34/ 515
அதிமுக 9 , பாஜக 01, தேமுதிக 0, பாமக 0, தமாகா 0, திமுக 20, காங்கிரஸ் 0, சிபிஎம் 01, சிபிஐ 02