கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-ம் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுவாகும்.
தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-ம் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி தொடர்ந்து சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தாலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றதே தவிர, வெற்றியைச் சுவைத்ததில்லை. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் இந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.