கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் ஜெயச்சந்திரனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஹெலன் சான்றிதழ் வழங்கினார். 
தமிழகம்

வாக்குப் பெட்டிகளைக் காணவில்லை: விளாத்திகுளத்தில் தகராறு செய்த அமமுக வேட்பாளர்; தாமதமாக வெளியான முடிவு

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பெட்டிகளைக் காணவில்லை என அமமுக வேட்பாளர் தகராறு செய்தததால் சலசலப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 9 மேஜைகளில் 19 பெட்டிகளில் பதிவாகியிருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் 2930 வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் 1036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சுமி, 915-ம், அமமுக வேட்பாளர் கருத்தப்பாண்டியம்மாள் 643, சுயேச்சை வேட்பாளர் ஜோதிலட்சுமி 192 வாக்குகளும் பெற்றிருந்தனர். 144 செல்லாத வாக்குகள் இருந்தன.

அப்போது அமமுக ஒன்றிய செயலாளர் வேலவன், 5 வாக்குப்பெட்டிகளை காணவில்லை என புகார் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம், "வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொண்டு வந்து, முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் பிரிக்கப்பட்டு, எண்ணப்பட்டன. எனவே, தவறுகள் எதுவும் நடக்கவில்லை. வாக்குப்பெட்டிகள் இருந்த காப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். மேலும், 1-வது வார்டில் வாக்குச்சாவடி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது" என்று கூறினர்.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமமுகவினர் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனால் காலை 11 மணிக்கு அறிவிக்க வேண்டிய ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டு முடிவுகள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு தான் அறிவிக்கப்பட்டது. இதனால் அதற்கு அடுத்துள்ள வார்டுகளின் எண்ணிக்கையும் தாமதமானது.

SCROLL FOR NEXT