தமிழகம்

குடியுரிமைச் சட்டம், குடியுரிமைப் பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானம்: சட்டப்பேரவைச் செயலரிடம் திமுக மனு

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை விதி 172-இன்கீழ், சட்டப்பேரவை விதிகளை தளர்த்தி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பியிருக்கின்ற தனிநபர் தீர்மானக் கடிதத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளரை நேரில் சந்தித்து அளித்தனர்.

அத்தீர்மான விவரம் பின்வருமாறு:

"மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம்; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு மாறானது என்பதாலும், ஈழத் தமிழர்களையும் - இஸ்லாமியர்களையும் புறக்கணித்து, இந்திய மக்களிடையே வெறுப்பு - பேதம் விதைத்திட ஏதுவாகும் என்பதாலும், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்குள்ளாகி, போராட்ட உணர்வைத் தூண்டி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPA) மற்றும் தேசிய குடிமக்கள் அல்லது குடியுரிமைப் பதிவேடு (NRC) ஆகியவற்றைத் தயாரித்திடவும், மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. எனவே இந்திய மக்களிடையே மத - இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி, இந்திய ஒற்றுமையையும் - ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று, தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது".

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT