2019-ம் ஆண்டில் தமிழக அரசு 34.5 சதவீத முதலீடுகளை இழந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு உலக முதலீட்டாளர் மாநாடுகளின் தோல்வியையும், லட்சணத்தையும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் எழுதி, வெளியிட்ட பதிவு:
“2019-ம் ஆண்டில் தமிழ்நாடு 34.57 சதவீத தனியார் முதலீடுகளை இழந்திருப்பது, அதிமுக ஆட்சி நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடுகளின் தோல்வியையும், லட்சணத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஊழலின் உருவமான அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள் மட்டும் இன்றி, புதிய முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பது வேதனை தருகிறது.
இதனால் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி - மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிமுக ஆட்சியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ‘என்று மறையும் அதிமுக ஆட்சியின் இந்த இருண்ட அத்தியாயம்?’ என்பதுதான் வேலை வாய்ப்புகள் இன்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களின் இன்றைய ஏக்கமாக இருக்கிறது”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.