தொல்.திருமாவளவன்: கோப்புப்படம் 
தமிழகம்

நெல்லை கண்ணனின் பேச்சு முழுக்க நகைச்சுவை; உள்நோக்கம் இல்லை: விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நெல்லை கண்ணனின் பேச்சு முழுக்க முழுக்க நகைச்சுவை எனவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (ஜன.2) வெளியிட்ட அறிக்கையில், "ஆங்கிலப் புத்தாண்டு நாளின் நள்ளிரவில் எண்பது வயதைத் தாண்டிய ஒரு மூத்த அரசியல் தலைவரான நெல்லை கண்ணனைத் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவமதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் மேடையில் பேசினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு எனத் தெரியவருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும்போது, அவர் மத்திய, மாநில அரசுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வர், துணை முதல்வர், இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அவரின் ஆவேசத்துக்கு ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள், குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள்தாம் காரணமாகும். இத்தகைய ஆவேசம் இன்று இந்தியா முழுவதும் கட்சி சார்பற்ற பொதுமக்களிடமிருந்தும் பரவலாக வெளிப்படுவதைக் காணலாம்.

நெல்லை கண்ணன் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருமே பாஜக அரசின் இத்தகைய பாசிசப் போக்குகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகவே குரல் கொடுத்து வருகின்றனர்.

மேடைப் பேச்சு, போராட்ட முழக்கம் போன்றவற்றில் ஒருமை விளிப்பு என்பது சிலநேரங்களில் சிலருக்குத் தன்னியல்பாகவும் தவிர்க்க இயலாததாகவும் அமைந்துவிடுகிறது. அதாவது, 'அவன், இவன், நீ, உன்' போன்ற ஒருமை விளிப்புகள் ஒருசிலருக்கு ஆவேச உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமையக்கூடியவையாகும்.

இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட பேச்சு மற்றும் முழக்கங்கள் நாகரிக வரம்புகளை மீறியவையே ஆகும். ஆனாலும் இதனை யாரும் பெரும்பாலும் பெரிதுபடுத்துவதில்லை. நெல்லை கண்ணனின் அத்தகைய பேச்சுக்கு அவரது வயது மூப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், அதனை நான் நியாயப்படுத்த முயலவில்லை.

'நான் இந்து அல்ல; சைவ சமயத்தைச் சார்ந்தவன்' என்று நெல்லை மாநாட்டில் அவர் பேசியது சனாதன சக்திகளை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதுதான் அவர்களின் எரிச்சலுக்கு முதன்மையான காரணியாகும்.

'அமித் ஷாவின் ஜோலிய முடிச்சுட்டா எல்லாம் சரியாயிடும்' என்று அவர் பேசியது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கான ஒன்று. அம்மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் அப்படியே புரிந்துகொண்டு சிரித்தனர். அதில் வேறு உள்நோக்கம் எதுவுமில்லை.

ஆனால், அமித் ஷாவைக் கொலை செய்யத் தூண்டுகிறார் என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அவர் மிக இயல்பாக நகைச்சுவைக்காகத்தான் அப்படி பேசினார் என்பது ஊரறிந்த உண்மையாகும்.

அவரும் உள்ளார்ந்த வெறித்தனத்தோடு பேசவில்லை; பங்கேற்ற முஸ்லிம்களும் அதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறு அதனைப் பொருட்படுத்துவதாக இருந்திருந்தால் 'நாரே தக்பீர்' என தன்னியல்பாக உரத்து முழங்கியிருப்பார்கள். மாறாக, அனைவரும் 'கொல்லென' சிரித்துவிட்டு கடந்துபோய் விட்டனர். நகைச்சுவைக்காக அவர் பேசினாலும் அதனை சரி என்று நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.

எனினும், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர் இவ்வளவு ஆவேசம் காட்டுவதும் வெறிக்கூச்சலிடுவதும் அவருடைய 'ஜோலியை முடிக்கும்' பேச்சுக்காக அல்ல என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

மோடி அரசின் மக்கள் விரோதப் போக்குகளையும் பாஜக உள்ளிட்ட சங்பரிவாரங்களின் சமூகவிரோத நடவடிக்கைகளையும் தனது உரையாற்றலால் தோலுரித்து அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் அவர்களின் ஆத்திரத்துக்குக் காரணமாகும். அத்துடன் அவர் இந்துமத அடையாளங்களுடன் முஸ்லிம்களிடையே பேசுகிறார் என்பது அவர்களுக்குக் கூடுதல் எரிச்சலைத் தருகிறது.

இந்நிலையில், பாஜக மற்றும் சங்பரிவாரங்களின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாகக் கைது செய்து அவரைச் சிறைப்படுத்தியிருப்பது அதிமுக அரசு. இது, எந்த அளவுக்கு பாஜகவுக்கு பணிந்து பணிவிடை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அதிமுக அரசின் இத்தகைய ஓரவஞ்சனையான நடவடிக்கைகள் அதன் பலவீனத்தை மட்டுமின்றி, சுதந்தரமின்றி மத்திய அரசுக்கு அஞ்சி கட்டுண்டு கிடப்பதையும் அம்பலப்படுத்துகிறது. தமிழக அரசின் இப்போக்கு வேதனைக்குரியதாகும்.

நெல்லை கண்ணன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப்பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT