பிரிக்கப்பட்ட தபால் வாக்குகள் பிளாஸ்டிக் வாலி மூலம் அந்தந்த அறைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இடம்: மதுரை வேளாண் கல்லூரி, படம்: கி.மகாராஜன். 
தமிழகம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மந்தம்: இதுவரை தபால் வாக்கு நிலவரம்கூட அறிவிக்கப்படாததால் வேட்பாளர்கள் அதிருப்தி

கி.மகாராஜன்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை மிகமிக மந்தமாக நடைபெற்றுவருகிறது. காலை 11.30 மணி ஆகியும்கூட தபால் வாக்கு நிலவரம்கூட அறிவிக்கப்படாததால் வேட்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியம், மாவட்டக் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் கடந்த டிச.27-ல் நடந்தது.

மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்கு 181 பேர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு 1,555 பேர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,467 பேர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 8,169 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 77.14 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மேலூரில் உள்ள வேளாண் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆனால், காலை 11.30 மணி ஆகியும்கூட இதுவரை எந்த ஒரு முன்னிலை நிலவரமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் வேட்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வழக்கமாக ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்களே வாக்கு எண்ணும் பணியில் பயன்படுத்தப்படுவர். ஆனால் இந்த முறை அரசுப் பணிக்கு அப்பாற்பட்டு வங்கி ஊழியர்கள், சமூக சேவகர்கள் என புதிது புதிதாக வாக்கு எண்ணும் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டாலும் கூட போதியளவு அனுபவம் இல்லாததால் வாக்கு எண்ணிக்கையை மிகவும் மந்தமாக செய்கின்றனர்.
4 பதவிகளுக்கான வாக்குகளை வகைப்படுத்தவே மணிக்கணக்காக நேரம் எடுத்துக் கொண்டனர். இடையில் தேநீர், ஸ்நாக்ஸ் இடைவேளைக்கு வேறு சென்றுவந்தனர்.

வாக்குகளை எண்ணியிருந்தாலும்கூட முடிவுகளை எப்படி அறிவிப்பது எனத் தெரியாமல் குழம்பி வருகின்றனர். தேர்தல் அலுவலர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காணவில்லை. வேட்பாளர்கள் எந்த ஒரு முன்னிலை நிலவரமும் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT