திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகதாஸ் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
திருவண்ணாமலை கார்கானா தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ் (55). சிறப்பு உதவி ஆய்வாளரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவு 11 மணியளவில் அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கணபதி என்ற காவலர், அவரை திருவண்ணாமலை அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகதாஸுக்கு கனகா (50) என்ற மனைவியும் முகேஷ் (26), மகேஷ் (21) என்ற இரு மகன்களும் உள்ளனர்.