வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் ஆறடி உயரத்துக்கு வளர்ந்துள்ள ‘மாப்பிள்ளை சம்பா’ ரக நெற்பயிர்களை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சீனிவாசன்(60), தனது வயலில் ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகமான ‘மாப்பிள்ளை சம்பா’வை சாகுபடிசெய்துள்ளார். இந்த நெற்பயிர்கள் தற்போது ஆறடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. நெற்பயிர்கள் நன்றாக தூர் வெடித்துக் காணப்படுவதால் ஒவ்வொரு கதிரிலும்400-க்கும் அதிகமாக நெல்மணி கள் விளைந்துள்ளன.
இதையறிந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் வந்து பயிர்களைப் பார்த்து வியந்து, சாகுபடி முறை மற்றும் பராமரிப்பு குறித்து ஆர்வமுடன் கேட்டுச் சென்றவண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறியதாவது: எனக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. எல்லா விவசாயிகளைப் போலவே நானும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தி குறுகிய கால நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்து வந்தேன். சாகுபடி செலவுஅதிகம், மகசூல் குறைவு என்றாலும் ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று எண்ணி லாப, நஷ்ட கணக்குப் பார்க்காமல் குறுகிய கால நெல் ரகங்களையே சாகுபடி செய்து வந்தேன்.
கடந்த சில ஆண்டுகளாகவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்வது குறித்த விவரங்களைக் கேட்டு சேகரித்து வந்தேன். முதல் முறையாக இந்த ஆண்டுதான் பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மாறினேன்.
முதல் முறை என்பதால் மொத்தமுள்ள எல்லா நிலத்திலும் சாகுபடி செய்ய வேண்டாம் என முடிவு செய்து, ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் சாகுபடி செய்தேன். நண்பர் ஒருவரிடம் பாரம்பரிய ரகமான ‘மாப்பிள்ளை சம்பா’ விதைநெல் 2 கிலோ வாங்கி அதைக்கொண்டு பாய் நாற்றங்கால் முறையில் விதைத்தேன்.
பின்னர், நெற்பயிர்களைப் பறித்து வயலில் நடவு செய்தேன். நடவுக்கு முன்பாக வயலில் தண்ணீர்பாய்ச்சி உழவு ஓட்டியதுடன் சரி, வேறு எதுவும் செய்யவில்லை. அத்துடன் எந்த ரசாயன உரத்தையும் பயன்படுத்தவில்லை.
தொடக்கத்திலேயே பயிர்கள் நன்கு வளரத் தொடங்கின. தொடர்ந்து, அவ்வப்போது மழை பெய்ததால் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையும் மிச்சமானது. காற்று மற்றும் தண்ணீரில் உள்ள நைட்ரஜனை கொண்டே பயிர்கள் நன்கு வளர்ந்து வந்தன.
தற்போது, நட்டு 123 நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் ஆறடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. நான் வயலுக்குள் இறங்கினால் நெற்பயிர்கள் என்னையே மறைத்து விடுகின்றன. இன்னும் 30 முதல் 40 நாட்களுக்குள் அறுவடை செய்துவிடலாம். மாப்பிள்ளை சம்பா நன்கு உயரமாக வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகிறது.
ஒவ்வொரு கதிரிலும் 400-க்கும் மேற்பட்ட நெல்மணிகள் விளைந்துள்ளன. பயிர்கள் நன்கு திடமாக வளர்ந்துள்ளதால் இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாகும். இனி, என்னுடைய எல்லா வயல்களிலும் மாப்பிள்ளை சம்பா ரகத்தையே சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.