சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு ஜிம், லிப்ட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய விடுதி கட்டப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சிறைச்சாலை இருந்த இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) 10 ஏக்கரில் ரூ.60 கோடி செலவில் 6 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் புதிய கட்டிடத்தில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த கட்டிடத்தின் அருகிலேயே ரூ.29 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சுமார் 750 மாணவிகள் படிக்கின்றனர். தற்போதுள்ள மாணவிகள் விடுதியில் வசதிகள் குறைவாக இருக்கிறது. அதனால் மாணவிகளின் வசதிக்காக 6 மாடிகள் கொண்ட புதிய மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் மாணவிகளுக்கான உடற்பயிற்சிக்கூடம் (ஜிம்), ஆடிட்டோரியங்கள், நவீன கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக நவீன லிப்ட் வசதியுடன் கூடிய மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. மாணவிகளின் பாதுகாப்புக்காக இந்த வளாகத்தில் காவல் நிலையமும் விரைவில் அமையவுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.