புத்தாண்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
வளிமண்டல சுழற்சியால் சென்னை மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் ஜன.1-ம் தேதி லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், புத்தாண்டை வரவேற்று பெண்கள் தங்கள் வீடுகளின் முற்றத்தில் வண்ணக்கோலம் போடுவதில் நேற்று காலை மும்முரமாக இருந்தனர். அப்போது வானில் கருமேகங்கள் உருவாகி மழை பெய்யத் தொடங்கியது. லேசாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாகக் கொட்டியது.
சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணாசாலை, பாரிமுனை, ஆவடி, அம்பத்தூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், பெரம்பூர், எழும்பூர், புரசைவாக்கம், பொத்தேரி, பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்தது. இதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்தது.
இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் சில மணி நேரத்துக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. புத்தாண்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.