தமிழகம்

'வேண்டும் சிஏஏ, என்ஆர்சி': மதுரையில் பாஜக போட்டி கோலம்

கி.மகாராஜன்

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வேண்டாம் சிஏஏ, என்பிஆர் வாசகங்கள் அடங்கிய கோலம் இட்டுவர மதுரையில் பாஜகவினர் போட்டி கோலம் வரைந்துள்ளனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை பெசன்ட் நகர் 2-வது நிழற்சாலையில் கடந்த 29-ம் தேதி கல்லூரி மாணவிகள் சிலர் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமான கோலங்களை வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ‘நோ என்ஆர்சி’, ‘நோ சிஏஏ’ என்ற வாசகத்துடன் அவர்கள் கோலங்களை வரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்களை நேரில் அழைத்து ஸ்டாலின் வாழ்த்தினர்.

பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, எம்.எல்.ஏ.துரைமுருகன் உள்ளிட்ட பலரின் வீட்டு வாசல்களிலும் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலங்கள் இடப்பட்டன.

இந்நிலையில் மதுரையில் இன்று பாஜக மாநில மகளிர் அணித் தலைவர் மகாலட்சுமி வீட்டு வாசலில் புத்தாண்டு வண்ணக் கோலத்துடன் வேண்டும் சிஏஏ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

கோலத்துக்குப் போட்டி கோலம் மூலம் பாஜகவினர் பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT