பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் மற்றும் வெங்காயம் விற்பனை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய், 2 அடி நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த நவ.29-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலால் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜன.9-ம் தேதி முதல் 12-ம்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூதலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், குறைந்த விலையில் வெங்காய விற்பனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த நவ.8-ம் தேதி முதல் தற்போது வரை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் 223 மெட்ரிக் டன் வெங்காயம் ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை ஆலோசகர் இரா.கார்த்தி கேயன், கூடுதல் பதிவாளர்கள் ராஜேந்திரன், அந்தோணிசாமி ஜான்பீட்டர், ஆர்.ஜி.சக்தி சரவணன், பா.பாலமுருகன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.